×

ஆவடி மாநகராட்சி தெருக்களில் கழிவுநீர் விட்டவர்களிடம் 25 ஆயிரம் அபராதம் வசூல்

ஆவடி, டிச. 12: ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் குப்பைகளை எரிப்பது, வீசுவது, கழிவுநீர் விடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட பொதுமக்கள், வணிக நிறுவனங்களை ஆய்வின் போது கண்டறிந்து ₹25 ஆயிரம் அபராதத்தை அதிகாரிகள்  விதித்துள்ளனர்.  ஆவடி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறையில் உள்ளன. மேற்கண்ட விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அபராத தொகையை உடனுக்குடன் வங்கியுடன் இணைக்கப்பட்ட “மொபைல் செயலி” மூலமாக வசூலிக்க மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்படி, கடந்த 3 நாட்களாக ஆவடி மாநகராட்சியின் உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, அண்ணனூர், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தெருக்களில் குப்பைகளை வீசுவது, எரிப்பது, சாலையில் கழிவு நீரை வெளியேற்றுவது, மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுவது, திருட்டுத்தனமாக பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீரை இணைப்பது உள்ளிட்ட செயல்களை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.  இதன்படி, மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடந்த மூன்று தினங்களாக ₹25,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : streets ,Awadhi Corporation ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...