×

ராஜீவ் காந்தி சாலையில் லாரி மோதி நாவலூர் சிக்னல் சாய்ந்தது

திருப்போரூர், டிச.12: பழைய மாமல்லபுரம் சாலையில் சோழிங்கநல்லூரை அடுத்து வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக நாவலூர் உள்ளது. இங்கு, ஏராளமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மென்பொருள் நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளன. மேலும் லட்சக்கணக்கானோர் வேலை செய்யும் சிறுசேரி ஐடி பார்க் நாவலூரை ஒட்டி அமைந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி ஓஎம்ஆர் சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான பஸ்களும் இந்த சாலையில் பயணிக்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கடந்த 2010ம் ஆண்டு தாழம்பூர் - நாவலூர் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

ஆனால், இந்த சிக்னல் பகுதியில், போதுமான போலீசார் இல்லாததால், சிக்னலை தானியங்கி முறையில் இயங்கும்படி வைத்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன், இந்த சிக்னல் மீது ஒரு லாரி உரசி விபத்தை ஏற்படுத்தியதில் கடந்த 2 நாட்களாக சிக்னல் செயலிழந்து சாய்ந்த நிலையில் கிடந்தது. இதனால் சிக்னல் இல்லாமல் போக்குவரத்து வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்றும், குறுக்கும் நெடுக்குமாகச் சென்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.

பெரும்பாலான போலீசார் கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலை கார்த்திகை தீப பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்க தாழம்பூர் போலீசார் இந்த நாவலூர் - தாழம்பூர் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலை பழுதுபார்த்து மீண்டும் அமைக்க வேண்டும். அதை முறையாக இயக்க போக்குவரத்து காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajiv Gandhi Road ,
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...