×

திருச்சுழி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்வரத்துக் கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்சுழி, டிச. 11: திருச்சுழி அருகே, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்மாய் நீர்வரத்துக் கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது கிராம மக்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.    திருச்சுழி அருகே, மைலி கிராமத்தில் மைலி மற்றும் நத்தக்குளம் கண்மாய்கள் உள்ளன. இவைகள் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மைலி கண்மாய்க்கு இடையாங்குளம் கண்மாயிலிருந்து சாலையோர ஓடை வழியாக தண்ணீர் வருகிறது. இந்நிலையில், இடையாங்குளம் கண்மாய் நீரை மைலி கண்மாய்க்கு கொண்டு செல்ல இடையாங்குளம் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மைலி கிராமத்தினர், ‘அரசு சர்வேப்படி மைலி கண்மாய் நீர்வரத்து ஓடையை இடையங்குளத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்டு தரவேண்டும் என காரியாபட்டி, திருச்சுழி தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதன்பேரில், நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற, அதிகாரிகள் பலமுறை முயன்றும், இடையாங்குளம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் திரும்பினர். இதனிடையே, கண்மாய் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைத்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என மைலி கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா, திருச்சுழி, காரியாபட்டி தாசில்தார்கள் பாண்டிசங்கர், ராமுசுந்தர் மற்றும் ஏடிஎஸ்பி மாரிராஜ், 5 டிஎஸ்பிகள், 10 இன்ஸ்பெக்டர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார், ஜேசிபி வாகனத்துடன் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை நேற்று அகற்றச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடையாங்குளம் கிராம பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வாகனத்திற்கு முன்பாக மறித்தனர். உடனே போலீசார் மறியல் செய்த அனைவரையும் போலீஸ் வேனில் அழைத்துச் சென்று, திருச்சுழி சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் மூன்று ஜேசிபியால் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மாலையில் சமுதாயக் கூடத்தில் இருந்த இடையாங்குளம் பொதுமக்கள் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க மைலி, இடையாங்குளம் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : evacuation ,water canal ,Tiruchi ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு