×

தீபத்திருவிழாவையொட்டி கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

உடுமலை, டிச. 11:  உடுமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தினர். ஒளிவடிவில் இறைவனை வணங்கும் திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா தமிழர்களின் தொன்மையான பண்டிகைகளில் ஒன்றாகும். கார்த்திகை விளக்கீட்டுத்திருவிழா என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவின் பொழுது வீடுகள் மற்றும் வீட்டைச்சுற்றிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். அத்துடன் முருகன் மற்றும் சிவன் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் சிறப்பாக நடைபெறும். பனை மரத்தைச்சுற்றி ஓலைகளால் உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்கி அதனை தீயிட்டு கொளுத்துவர். இந்த சாம்பலை வீடுகளுக்கு எடுத்து சென்று திருநீறாகப் பூசிக்கொள்பவர்களும் உண்டு. மேலும் வயல் வெளிகளில் தூவினால் விவசாயம் சிறக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அந்த வகையில் உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சாமிக்கு திருக்கார்த்திகையையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து இரவு 7 மணியளவில் கோயிலின் முன்பு சுவாமி எழுந்தருளியதை தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றி வழிபாடு நடைபெற்றது. பின்னர் சுப்ரமணியர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தருளினார். இதேபோல உடுமலை மாரியம்மன் கோயில், பாப்பான்குளம் பாலதண்டபாணி கோயில், தேவனூர் புதூர் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை தீப விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வட்டமலைக்கரை அணையில் தீபம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கடந்த 1980ம் ஆண்டு 550 ஏக்கர் பரப்பளவில் 30 அடி உயரமுள்ள வட்டமலைக்கரை அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் வெள்ளகோவில், தாசனாயக்கன்பட்டி, புதுப்பை, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்து 50 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. பி.ஏ.பி. பாசன கால்வாய் கசிவு நீர் மூலமும், பல்லடம், சூலூர், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் வட்டமலைக்கரை ஓடையில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு உதவும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் 20 ஆண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அமராவதி அணையின் உபரி நீரை அந்த அணைக்கு கொண்டு வர 20 கி.மீ தூரம் கால்வாய் வெட்ட அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் ஆய்வு பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளது.இந்நிலையில் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசுக்கு கவன ஈர்ப்பு செய்யும் வகையில் நேற்று மாலை அணையின் பகுதியில் அப்பகுதி மக்கள் ஆயிரக்காணக்கான தீபங்களை ஏற்றினர்.

Tags :
× RELATED அரசு மருத்துவக்ககல்லூரி...