காங்கயம் நகராட்சியில் மேல்நிலை தொட்டியை சீரமைக்க கோரிக்கை

காங்கயம், டிச. 11: காங்கயம் நகராட்சியில் உள்ள சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் நகராட்சி, பங்களாப்புத்தூர் சாலையில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் 2500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மக்களின் தண்ணீர் தேவையைப்போக்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி அமைத்து அதன் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மேல்நிலை நீா் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. 2007ம் ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி தற்போது சேதமாகி, கான்கிரீட் கரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. தொடர்ந்து காரைகள் பெயர்ந்து வருகிறது. தண்ணீர் நிரப்பும்போது சேதமான பகுதியில் நீர் வழிந்து வருகிறது. தொட்டி அருகில் வீடுகள் உள்ளன.  இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சரி செய்யாமல் ஆண்டு தோறும் மராமத்து பணி என்று போர்வையில் வர்ணம் பூசி வருகின்றனர். மேலும் தொட்டிசுத்தம் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் மக்களிடம் கூறுகின்றனர்.  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேல்நிலைத் தொட்டியை சீர் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kangayam Municipality ,
× RELATED வடிவேல் நகர் மேல்நிலை நீர்த்தேக்க...