×

பட்டுக்கூடு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை, டிச.11:கோவை பட்டுக்கூடு அங்காடி மையத்தில் நடந்த ஏலத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் பட்டுக்கூடு விலை கிலோவுக்கு ரூ.42 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  கோவையில் பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. பட்டுக்கூடு அங்காடிக்கு வரும் நூற்பாளர்கள் விவசாயிகளிடம் இருந்து கூடுகளை வாங்கி பட்டுநூலாக திரித்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பட்டுநூல் பரிமாற்றகத்திற்கு விற்பனைக்கு வழங்குவர். இந்த பட்டு நூல்கள் ஏலம் முறைப்படி நெசவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பட்டாடைகள் தயாரிக்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ பட்டுநூல் ரூ.3194 க்கு விற்பனையானது. பட்டுநூல் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.98 அதிகரித்தது. நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்திற்கு 8 விவசாயிகள் வந்திருந்தனர். 843.980 கிலோ பட்டுக்கூடு ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 439க்கு ஏலம் போனது. பட்டுக்கூட்டின் தர அடிப்படையில் அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.435க்கும், குறைந்தபட்சமாக ரூ.372க்கும், சராசரியாக ரூ.419க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் பட்டுக்கூட்டின் விலை சராசரியாக கிலோவுக்கு ரூ.42 வரை அதிகரித்தது. இதனால் ஏலத்திற்கு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில மாதங்களாக பட்டுநூலுக்கு நல்ல விலை கிடைத்தபோதும் பட்டுக்கூட்டின் விலை உயராமல் இருந்தது. தொடர் மழை காரணமாக பட்டுக்கூட்டின் தரம் குறைந்ததால் விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது மழை சற்று தணிந்திருப்பதால் பட்டுக்கூட்டின் விலை அதிகரித்துள்ளது.

Tags :
× RELATED வாழைத்தார் விலை வீழ்ச்சி: பரிதவிக்கும் விவசாயிகள்