×

கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் மணல் கடத்தும் வாகனங்களால் சாலை படுமோசம்

கொள்ளிடம், டிச.11: கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் மணல் கடத்தும் வாகனங்களால், ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை, கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து வடரெங்கம் கிராமம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையின் வழியே செல்வோர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் ஆற்றங்கரை சாலை மெலிந்து காணப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதால், மணல் ஏற்றி வரும் டிராக்டர்கள் மற்றும் டயர் வண்டிகள் அடிக்கடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து சாலையில் ஏறும்போது சாலை உடைந்தும் மெலிந்தும் போயுள்ளது.

இரவு நேரங்களில் அதிகாரிகள் உடந்தையுடன் மெகா மணல் கொள்ளை நடைபெறுகிறது. கொன்னக்காட்டுப்படுகையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தினந்தோறும் இரவு நேரங்களில் மாலை 7முதல் காலை 6 மணி வரை மணல் கொள்ளை நடைபெறுவதாக கூறப்படுகிறது.தினந்தோறும் இரவில் 10 டிராக்டர்கள் மற்றும் 20 மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தி வரப்பட்டு இரவோடு இரவாக வெளியூர்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டு வருவதால் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதன் மூலம் ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமாக மாறிவிட்டது. ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்கும் அதிகாரம் பொதுப்பணித்துறையிடம் இருந்தது.

ஆனால் கடந்த ஒரு வருடமாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரம் பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரத்துறையிடம் இல்லை. எனவே மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. எங்களிடம் அந்த அதிகாரம் இருந்த போது மணல் கடத்தல் முழுமையாக கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது என்றார். இதுகுறித்து சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தல் சாதாரணமாக நடைபெறுவதால் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் ஆற்றங்கரை சாலையில் செல்வோர்கள் மிகுந்த சரமத்துடன் சென்று வருகின்றனர். கொன்னக்காட்டுப்படுகையில் அடிக்கடி வாகனங்கள் மணல் ஏற்றி ஆற்றங்கரை சாலையின் மேல் ஏறிச் செல்வதால் சாலை மிகவும் மென்மையாக மாறி விட்டது.

இந்த வழியே செல்வோர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பை மீறியும் நடைபெறும் இரவு நேர மணல் கடத்தலை தடுக்கும் வகையில் கொன்னக்காட்டுப்படுகை மற்றும் அதனைச் சார்ந்த பகுதியில் ஆற்றங்கரை சாலையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : Road ,village ,Konkatakadavai ,
× RELATED பராமரிப்பின்றி பாழான நயினார்குளம்...