×

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் 17 ஆண்டுகள் டாஸ்மாக் பார் நடத்திய பெண் மதுவிலக்கு டிஎஸ்பி மிரட்டுவதாக கலெக்டர், எஸ்பியிடம் மனு

விருதுநகர், டிச.10:விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியில் 17 ஆண்டுகள் டாஸ்மாக் பார் நடத்திய பெண், தன்னை மதுவிலக்கு டிஎஸ்பி மிரட்டுவதாக கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வத்திராயிருப்பு அருகில் உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் பாண்டியம்மாள்(55). இவர் கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, எனது கணவர் அயோத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், 5 குழந்தைகளுடன் வறுமையில் இருந்தேன். அப்போதைய கலெக்டர் முகம்மது அஸ்லாமிடம் வாழ வழி செய்யும்படி மனு அளித்தேன். படிக்காததால், டாஸ்மாக் கடை வேலை தெரியும் என்றேன். அதை தொடர்ந்து கூமாபட்டியில் டாஸ்மாக் கடையை திறந்து பார் நடத்தும் உரிமையை பெற்றுத்தந்தார். அந்த கடைக்கான மாதாந்திர தவணையை மாதம்தோறும் செலுத்தி நடத்தி வந்தேன். கூமாபட்டி டாஸ்மாக் கடையும் லாபத்தில் இயங்கியது.  

கூமாபட்டியில் இருந்த மற்றொரு டாஸ்மாக் கடை சரியாக ஓடவில்லை. அதை நடத்தி வந்த சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் தொடர்ந்து பல இடையூறு கொடுத்து நான் நடத்தி வந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை கடந்த மார்ச் மாதம் மூடும்படி செய்து விட்டார். தமிழகத்தில் மதுக்கடை பாரை நடத்திய ஒரே பெண் என்ற வகையில் மீண்டும் கடை திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து சொந்தமாக இடம் வாங்கி தமிழ்நாடு சங்க பதிவு மூலம் எப்எல்2 கடை நடத்த அரசு விதிப்படி பணம் கட்டி உள்ளேன். இதை அறிந்த மாரியப்பன், கிருஷ்ணன்கோவிலில் உள்ள மதுவிலக்கு டிஎஸ்பி மூலம் மிரட்டி வருகிறார். டிஎஸ்பி ஸ்டீபன், என்னையும், எனது இரு மகன்களையும் குண்டர் சட்டத்தில் போட்டு விடுவேன் என மிரட்டி வருகிறார்.

எந்த குற்றமும் செய்யாத நிலையில், எப்எல் 2 பார் திறக்க கூடாது என மிரட்டி வருகிறார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன். மதுவிலக்கு டிஎஸ்பி மற்றும் மாரியப்பனிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags : task force ,Virudhunagar district ,Coomapatti ,SP ,Collector ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...