×

மஞ்சூர் அருகே கரடியை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை

மஞ்சூர்,  டிச. 10: மஞ்சூர் சுற்றுப்புற கிராமங்களில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும்  கரடியை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி  சுற்றி வருகிறது. மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை கண்டி பகுதியில் உள்ள பள்ளி  கட்டிடத்தின் ஜன்னலை தொடர்ந்து மூன்று முறை உடைத்து உள்ளே புகுந்த கரடி  அங்கிருந்த சமையல் பொருட்களை சூறையாடியது. இதேபோல் மஞ்சூர் அய்யப்பன்  கோயில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் உள்ள முனிஸ்வரர் கோயில்,  மஞ்சூர் அட்டி விநாயகர் கோயில், முள்ளிமலை ராமர் கோயில் உள்பட பல்வேறு  கோயில்களில் இரவு நேரத்தில் புகுந்து அங்குள்ள பூஜை பொருட்களை  சேதப்படுத்தியது. எண்ணெய் குடிப்பதற்காக விளக்குகளை கீழே தள்ளி உடைத்து  செல்வதுமாக தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் முள்ளிமலை பகுதியில்  கடந்த இரு நாட்களுக்கு முன் புதிய வீடு கிரஹபிரதேசம்  நடைபெற்றது.  இதற்காக அருகில் உள்ள வீடு ஒன்றில் சமையல் செய்துள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு சமையலறை கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி அங்கு  பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது.  குடியிருப்புகளுக்குள்ளேயே கரடி நடமாடி வருவதால், பொதுமக்கள் மத்தியில்  கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க  வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இது குறித்து ‘தினகரன்’  நாளிதழிலும் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பீதியை  ஏற்படுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து  அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Tags : Manjur ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...