×

எளாவூர் சோதனை சாவடியில் ஆய்வு நவீன சோதனை சாவடிகள் மூலம் 64 கோடி வருமானம்

கும்மிடிப்பூண்டி, டிச. 10:  கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் போக்குவரத்து துறை கமிஷனர்  ஜவஹர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி கடந்த ஆண்டு ரூ. 137 கோடியில் துவங்கப்பட்டது. இதில் ஆந்திரா, டெல்லி, ஹரியானா, பீகார், ஒரிசா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து வாகனங்களில் சென்னைக்கு கொண்டு செல்லும் அனைத்து விதமான பொருட்களை கண்காணிக்கும் வகையில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். பின்னர் வனத்துறை, காவல்துறை,  சுகாதாரம், வாகனவரி, தீயணைப்பு,  கலால், கால்நடை உள்ளிட்ட 8 துறைகள் சார்ந்த அலுவலகங்களுக்கு போதிய பணியாளர்களை நியமிப்பது குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் வாகன சோதனைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கமிஷனர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்கேனிங் மூலம் வாகன சோதனை செய்யும் வசதி தமிழகம் முழுவதும் எங்கும் கிடையாது. அதைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன சோதனை சாவடிகள் மூலம் ரூ. 64 கோடியே 18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இதில் வாகன சோதனையில் 5681 வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்கள் 125 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் போக்குவரத்து காவல் மற்றும் சுகாதாரத் துறையினர் மூலம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் விபத்துகள் குறைந்தது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து உயரதிகாரிகள் தமிழகம் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் சாலைகள் அதிக பாதுகாப்பாக இருப்பது முதல் கொள்கை. அரசுக்கு போக்குவரத்து துறை மூலம் அதிக அளவில் வருமானம் வரவேண்டும் என்பது தங்களது இரண்டாவது கொள்கை. அனைத்து துறைகளுக்கும் போதிய ஊழியர்களை நியமித்து சிறப்பான முறையில் நவீன முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : checkpoints ,checkpoint ,Elavur ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...