×

முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை தினம் பழநியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பழநி, டிச. 9: முகூர்த்தநாள் மற்றும் விடுமுறை தினத்தின் காரணமாக பழநியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. இந்நிலையில் வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளின் காரணமாக நேற்று பழநி நகரில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவு இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடிவாரம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. திருமண மண்டபங்கள் மற்றும் லாட்ஜ்கள் போன்றவை விசேஷ வீட்டினரால் புக் செய்யப்பட்டிருந்ததால் பழநி நகருக்கு வந்திருந்த பக்தர்கள் ரூம்கள் கிடைக்காமல் அலைய வேண்டியதாகி விட்டது.

சன்னதி வீதி, கிரிவீதி, அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி, வையாபுரி குளம் பைபாஸ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். அதிகக் கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. அன்னதான கூடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர்.பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் நேற்று அதிக கூட்டம் காணப்பட்டது. கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த விடுமுறை நாட்களில் அடிவார பகுதியில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Mughal ,holidays ,
× RELATED உத்தமபாளையத்தில் அன்றாடம்...