பள்ளிபாளையத்தில் இருந்து 250 கிலோ எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பப்பட்டது

பள்ளிபாளையம், டிச.9: பள்ளிபாளையம் பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளில் இருந்து பிரிக்கப்பட்ட 250 கிலோ எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பப்பட்டது.   பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த கழிவுகளில் பழைய கம்ப்யூட்டர்கள், ரிமோட்டுகள், செல்போன்கள் உள்ளிட்ட உபயோகமில்லாத எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரிக்கப்பட்டு தனியாக சேகரிக்கப்பட்டது. இ-கழிவுகளை அழிக்கும்போது அதிலிருந்து கதிர்வீச்சு கிளம்பி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, இத்தகைய கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் நாமக்கல் நகராட்சி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சேகரிக்கப்படும் இ- கழிவுகளை சென்னைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட 250 கிலோ இ-கழிவுகள் இரண்டு கட்டமாக நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து தனி லாரியில் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கழிவுகளை அனுப்பும் நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் இளவரசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செங்கோட்டையன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : school ,Namakkal Municipality ,
× RELATED மூட்டையில் குவியும் கோழி கழிவுகள்