மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணி தீவிரம் வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்

நாமக்கல், டிச.9: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சி மன்றத் தலைவர், 2595 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், 17 மாவட்ட கவுன்சிலர், 172 ஒன்றியக்குழு உறுப்பினர் என மொத்தம் 3106 பதவிகளுக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று(9ம் தேதி) துவங்குகிறது. மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் 322 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட பிடிஓ அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. முதற்கட்டமாக 27ம் தேதி கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், 30ம் தேதி எலச்சிபாளையம், எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம் ஆகிய 7 ஒன்றியத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அலுவலர் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களாக 455 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : district ,
× RELATED திருவாரூர் மாவட்டம்...