×

பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிர்களை பாதுகாப்பது எப்படி?

திருவள்ளூர், டிச. 9: வடகிழக்கு பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாத்திட திருவாலங்காடு வேளாண்மை உதவி இயக்குனர் எபினேசன் ஆலோசனை வழங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால் அமைத்து வடித்திட வேண்டும். அதிக நாட்கள் நீர் தேங்கினால் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளம் மஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும். அப்போது, தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமிட வேண்டும்.

பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில், 4 கிலோ டிஏபியை 10 லிட்டர் நீரில், மாலை வேளையில் கரைத்து வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமிட வேண்டும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால், ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, இரவு வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும்.நெற்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து, ஈ, இலை சுருட்டுப்புழு, பச்சை தத்துப்பூச்சி, குலை நோய், இலை உரை, கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிந்து தகுந்த பூச்சிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் தண்ணீர் தேக்கத்தை தாங்கி வளரக்கூடிய ரகங்களான சுவர்ணா சப் 1, சி.ஆர்.1009 சப் 1, போன்ற ரகங்களை நடவு செய்திட வேண்டும். இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.  


Tags :
× RELATED 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்