×

திருப்புத்தூரில் குடியிருப்பில் தேங்கிய மழைநீர் அகற்றம்

திருப்புத்தூர், டிச.5: திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடந்த மழைநீரை அகற்ற வேண்டும் என தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீரை மின் மோட்டார் மூலம் அகற்றி வருகின்றனர். திருப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பல தெருக்களில் முறையான ரோடு வசதிகள் மற்றும் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் நடைபாதையில் குளம்போல் தேங்கி விடுகிறது. இவ்வாறு தேங்கும் தண்ணீருடன் கழிவுநீரும் சேர்வதால் அந்தப்பகுதிகளில் தொற்று நோய் ஏற்படுகிறது. திருப்புத்தூர் விஜயநகர், பிரபாகர் காலனி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் செல்ல வழியில்லாமல் நடைபாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் தினந்தோறும் வீட்டை விட்டு வெளியே சென்றுவர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதனையடுத்து சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின்படியும், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா அறிவுரைகளின்படி, திருப்புத்தூர் பேரூராட்சியில் பிரபாகர் காலனி, விஜய நகர், எம்.ஜி.ஆர். நகர், மருதுபாண்டியர் நகர், அகிழ்மனை தெரு, சாம்பான் ஊரணி பின்புறம், காரைக்குடி ரோடு, கான்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் ஜேசிபி இயந்திரம் மற்றும் ஆயில் இன்ஜின் கொண்டு பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கும் பள்ளமான பகுதிகளான மருதுபாண்டியர் நகர் மற்றும் காரைக்குடி ரோடு பகுதிகளில் கட்டிட மண் மற்றும் கிரசர் மண் கொட்டப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கவிதா, மோகன்ராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...