×

கும்மிடிப்பூண்டியில் குளமான சின்ன ரயில்வே கேட் சுரங்கப்பாதை

கும்மிடிப்பூண்டி, டிச. 5: கும்மிடிப்பூண்டி சின்ன ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யது, தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் ஓட்டி உள்ள பகுதியில் சின்ன ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பல ஆண்டுகளாக திறக்காததால் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் மூடப்பட்ட ரயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடந்துதான் தினமும் புது கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, தேர்வழி, அயநெல்லுர், மங்காவரம், சின்ன சோழியம்பாக்கம், தேவம்பேடு, பட்டுப்புள்ளி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனம் மூலமும், நடந்தும் தொழில்பேட்டைக்கு வியாபாரம் செய்வதற்காக சரக்குகளை எடுத்து செல்கின்றனர்.    ரயில்வே கேட்டின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனையடுத்து மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க இயலாத நிலையில், அதன் கீழ் சுமார் ₹2 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைத்திட ரயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்கள்,  வாகனங்கள் தடையின்றி செல்ல 37 மீட்டர் நீளம், 16 அடி அகலம் மற்றும் 10 அடி உயரத்திற்கு ரயில் சுரங்கப்பாதை 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 3 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் நடந்துசெல்லும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிவதால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியும் வருகின்றனர். மழைநீர் காலை மாலை மட்டுமே மின்மோட்டார் மூலம் எடுக்கப்படுகிறது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திலேயே மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனை ரயில்வே துறை அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி சின்ன ரயில்வேகேட் பகுதிக்கு வந்து சுரங்கபாதை பாலத்தில் உள்ள விரிசல்களை சரிசெய்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Small Railway Gate Tunnel ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...