×

வீட்டுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்க ₹10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப்பொறியாளர் கைது

சென்னை, டிச. 5: வீட்டிற்கு கழிவுநீர் இணைப்பு மற்றும் சாலையில் பள்ளம் தோண்டுவதற்காக, ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் நரேந்திரபாபு (62). அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு தருவதற்கு 4வது மண்டலம், 34 வது வார்டு உதவி பொறியாளர் மணிகண்டனை அணுகியுள்ளார்.அப்போது மணிகண்டன் சாலையில் பள்ளம் தோண்ட வேண்டும் என்றால் ₹10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்சம் தர மறுத்த நரேந்திரபாபு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் குமரகுருபரன் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் மலர்கொடி மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் நரேந்திரபாபுவிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.

அதன்படி நேற்று நரேந்திரபாபு கட்டபொம்மன் தெருவில் உள்ள தனது வீட்டருகே நின்று உதவி பொறியாளர் மணிகண்டனுக்கு போன் செய்து, ‘பணம் தயாராக உள்ளது. வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார். உடனே அங்கு வந்த மணிகண்டன் பணத்தை வாங்கும்போது அங்கு சுற்றி நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி பகுதியில் அமைந்துள்ள உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் ஆய்வு செய்தனர். 5 மணி நேரம் நீடித்த விசாரணையின் முடிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு