×

மீன்வள பல்கலை. மாணவர்கள் தூய்மைப்பணி

நாகை, நவ.22: உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளப்பல்கலைக்கழகம், மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தூய்மை பணி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ம் தேதி உலக மீன்வள தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், தலைஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றாக இணைந்து நாகை அக்கரைபேட்டை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து பேரணியாக மீன்பிடி தளத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவு பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். மீன்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் ஜெயராஜ், தலைஞாயிறு மீன்வள கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தலைஞாயிறு மீன்வள கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி கூறியதாவது: உலகில் மீன்பிடி தொழில் அதிகரித்து வருகிறது. ஆனால் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனால் தனிநபர் வருமானம் குறைகிறது. இதை போக்குவதற்காக அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்ககூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க கடல் மாசுபடுதல், துறைமுகங்களை மாசுபடுத்துதல் போன்றவற்றை செய்யக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ம் தேதி உலக மீன்வள தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஆபத்தான தொழில்களில் ஒன்றான மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் வாழ்வையும், தொழிலையும் மேம்படுத்துவது தான் நோக்கம். உலக மீன்வள தினத்தின் முக்கிய நோக்கம் வளங்குன்றா வண்ணம் மீன்வளத்தினை பாதுகாப்பது மற்றும் பயன்படுத்துவது ஆகும் என்றார்.

Tags : University of Fisheries ,
× RELATED ரூ.139 கோடியில் மீன் இறங்குதளங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்