×

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் நாகையில் ஓட்டல், தங்கும் விடுதி மீண்டும் அமைக்கப்படுமா?

நாகை, நவ.22: நாகையில் மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். நாகையில் புகழ்பெற்ற காயரோகண சுவாமி கோயில் உள்ளது. காசியில் நீராடி சிவனின் அருள் பெற வந்த புண்டரிகமுனிவர் இந்த காயரோகண சுவாமி கோயிலில் தான் அருள் பெற்றார். காயங்களுடன் வந்த புண்டரிகமுனிவரை சிவன் அணைத்து கொண்ட சிறப்பு வாய்ந்த தலம் நாகையில் தான் உள்ளது. அந்த முனிவர் நீராடிய புனித குளம் நாகையில் தான் அமைந்துள்ளது. காளமேக புலவர் நாகையில் வாழ்ந்து நாகை மக்களின் தமிழ்மொழி சிறப்பை கண்டு வியந்த இடமும் உள்ளது.

அதேபோல் பழநியில் உள்ள முருகன் சிலையை வடிவமைக்க போகருக்கு உதவிய கோரக்க சித்தர் சமாதி நாகை அருகே வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ளது. கந்தசஷ்டி விழாவின்போது திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ய வேல் கொடுத்த இடமான சிக்கல் சிங்காரவேலவர் சன்னதியும் நாகையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. உலகபுகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் நாகையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. நாகையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உலக மக்கள் ஒன்று கூடும் நாகூர் தர்கா அமைந்துள்ளது.

இவ்வாறு எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் சுற்றுலா வரும் புகழ்பெற்ற இடமாக நாகை உள்ளது. நாகையில் சிறந்த மீன்பிடி தலம் அமைந்துள்ளது. கலங்கரை விளக்கம், துறைமுகம் என்று சுற்றுலா பயணிகளை தன் வசம் இழுக்கும் எல்லா சிறப்பு அம்சங்களையும் நாகை பெற்றுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான விடுதிகள் குறைவான விலையில் நாகையில் கிடைப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. நாகை அக்கரைபேட்டை செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் செயல்பட்டு வந்த ஓட்டல் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டு பல ஆண்டு காலம் ஆகிவிட்டது. இதனால் நாகைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அதிக கட்டணத்தை கொடுத்து தனியார் தங்கும் விடுதியில் தங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நாகையில் சுற்றுலாதுறை சார்பில் புதிதாக விடுதிகள் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: பெங்களூர், கோவா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயம் வந்து செல்கிறோம்.

அதேபோல் மூன்று மதங்களின் வழிபாடு செய்யும் சிறந்த தலமாக நாகை அமைந்துள்ளது. அதேபோல் சித்தர்கள் வாழ்ந்த பூமியாக நாகை அமைந்துள்ளது. நாகை அருகே நிறைய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு மலிவான விலையில் அரசு சார்பில் விடுதிகள் ஏதும் இல்லை. கடந்த 1993ம் ஆண்டு முதல் நாகை அக்கரைபேட்டை செல்லும் சாலையில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான உணவு விடுதி மற்றும் ஓட்டல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. ஆனால் மீண்டும் நாகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதி மற்றும் அமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 5 நாட்கள் நகையில் தங்கலாம் என்று நினைப்பவர்கள் 2 நாட்களில் திரும்பி செல்லும் நிலை உள்ளது. நாகை வளர்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பஸ்ஸ்டாண்ட் அல்லது ரயில்வே ஸ்டேசன் ஆகியவற்றின் அருகில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் புதிதாக ஓட்டல் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags : hotel ,hostel ,Naga ,Tamil Nadu Tourism Development Corporation ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...