×

ஒரே நாளில் தேனியில் மூன்று விபத்து மாணவர்கள், பொதுமக்கள் காயம்

தேனி, நவ. 22: தேனியில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று விபத்துக்கள் நடந்தன. அதிர்ஷ்ட்ட வசமாக பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இப்பகுதியில் பெரும் விபத்து நடக்கும் முன் தேனி எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனியில் பங்களாமேடு சந்திப்பில் டூவீலரும், தனியார் பஸ்சும் நேற்று மோதிக்கொண்டன. இதில் டூவீலரில் வந்தவர் காயமடைந்தார். இதேபோல் குன்னூரில் டோல்கேட் அருகே ஒரு தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்டன. இதில் பஸ் பயணிகள் சிலர் காயமடைந்தனர். கோடாங்கிபட்டியில் தனியார் பள்ளி பஸ்சும், காரும் மோதிக்கொண்டன. இதில் மாணவ, மாணவிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரே நாளில் நடந்த இந்த விபத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` மதுரை ரோட்டில் மட்டும், 30 மருத்துவமனைகள், 20 மருந்துக்கடைகள், 15 லேப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்கான பெரும் வணிக நிறுவனங்கள் உள்ளன. ஐந்து பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
தேனியில் மதுரை ரோடு நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் விபத்து நடந்து வருகிறது. அதேபோல் பெரியகுளம், கம்பம் ரோடுகளும் விழிபிதுங்கி வருகின்றன. நெரிசலைப் பற்றி கவலைப்படாமல் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் வருகின்றன. பஸ்களின் அதிக வேகம் மற்றும் நெரிசலால் ஏதாவது பெரும் விபத்து ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் தேனி புதிய எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி இந்த பிரச்னையில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போக்குவரத்திற்கு மாவட்ட கலெக்டர் தான் முக்கிய பொறுப்பு. எனவே, அவரும் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட வேண்டும்’’ என்று கூறினர்.

Tags : accident students ,Bee ,
× RELATED கொரோனா பாதிப்பில் இருந்து...