×

நிலக்கடலை விதையை பரிசோதிப்பது அவசியம் நிலைய அலுவலர் தகவல்

பரமக்குடி, நவ.22: நிலக்கடலை சாகுபடி செய்பவர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் நிலக்கடலை விதையின் தரத்தை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என பரமக்குடி விதை பரிசோதனை நிலைய அலுவலர் சிங்கார லீனா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, கமுதி,பரமக்குடி, திருப்புல்லாணி, நயினார்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட வட்டாரங்களில் கார்த்திகை பட்டத்தினை முன்னிட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு விதை அதிகமான செலவுகளை பிடிப்பதால், விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதையின் தரத்தை சோதனை செய்து பயன் படுத்த வேண்டும். ஈரப்பதம்,விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், பிற ரகங்களின் கலப்பு விகிதம் ஆகியவற்றால் விதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூச்சி மற்றும் பூஞ்சான தாக்குதலுக்கு வழிவகுக்கும். விதை குவியல் வெப்பத்தை அதிகப்படுத்தி முளைப்புத் திறனை பாதிக்கும். பிற ரகங்களின் விகிதம் அதிகமானால் இனத்தூய்மை பாதிக்கப்படும். விதை பரிசோதனை செய்வதற்கு 50 கிராம் நிலக்கடலை விதையை விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். விதை பரிசோதனை மாதிரி அனுப்பப்படும் போது விதை குவியலின் பிரதியாக இருக்க வேண்டும். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பும் போது ஒவ்வொரு மாதிரிக்கும் குறியீட்டு எண்கள் வழங்க வேண்டும்.
சுத்தமான பையில் மாதிரிகள் எடுத்து பயிர் மற்றும் ரகத்தின் விவரங்கள் அடங்கிய துண்டு சீட்டு உள்ளே வைத்து கட்டி அளிக்கலாம். ஒரு மாதிரிக்கு ரூ.30 பரிசோதனை கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என பரமக்குடி விதை பரிசோதனை நிலைய அலுவலர் சிங்கார லீனா விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Tags : Inspection ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...