×

சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வரலாறு தேவை துணைவேந்தர் பேச்சு

காரைக்குடி, நவ. 22: சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வரலாறு தேவை என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுதுறை, சென்னை தொல்லியல் துறையும் இணைந்து உலக பாரம்பரிய வார துவக்கவிழாவை நடத்தியது. வரலாற்றுத்துறை தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘வரலாறு என்பது புத்தகங்களை படித்து மார்க் பெற மட்டுமே என நாம் நினைக்கிறோம். பழங்கதை பேசும் நிகழ்வு என்ற எண்ணம் உள்ளது. அறிவியலின் அடிப்படையில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் வரலாற்றை விருப்ப பாடமாக படிக்கின்றனர். நாம் பிறப்பதற்கு முன்பு என் நடந்தது என தெரியாவிட்டால் நாம் எப்போதும் குழந்தைகள்
தான்.
நம்மை நாமே தெரிந்து கொள்ள வரலாறு தேவை. சமுதாயத்தின் நினைவாற்றல் வரலாற்றின் பதிவுகள். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வரலாறு தேவை. நம்நாட்டின் கலைப் பொக்கிஷங்களை கண்டெடுத்து அவற்றை பாதுகாத்து, காட்சிப்படுத்தி அவற்றில் உள்ள அறிவியல் உண்மைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்’’என்றார்.
இதில் தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரி பிரசன்னா, கலைப்புல முதன்மையர் முருகன், ராமநாதன் செட்டியார் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவிபேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு