×

கால்நடை வளர்ப்பு குறைவால் வெறிச்சோடிய மேய்ச்சல் நிலம்

புதுக்கோட்டை, நவ. 20: கால்நடை வளர்ப்பு குறைந்து வருவதால் பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம் 95 சதவீதம் விவசாயத்தை நம்பியே உள்ள மாவட்டமாகும். இதனால் அனைத்து விவசாயிகளும் தங்கள் வீட்டில் ஆடு, பசுமாடுகள், எருமை மாடுகள், உழவு செய்யும் மாடுகள் என பல கால்நடைகளை வளர்த்து வந்தனர். மாடுகள் மேய்வதற்கு விவசாயிகள் தங்கள் சொந்த காடுகளில் மழை காலங்களில் புல் நன்கு வரும் வகையில் மேச்சல் நிலங்காக மாற்றி வைத்திருந்தனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேச்சல் நிலங்கள் விவசாயிகள் தங்களின் வசதிக்கு ஏற்றார்போல் பாதுகாத்து கால்நடை வளர்ப்புக்கு பயன்படுத்தி வந்தனர். தினசரி காலை முதல் மாலை வரை மேச்சல் நிலங்களில் கால்நடைகளை மேயவிட்டு பின்னர் மாலை வீட்டிற்கு கால்நடைகளை கொண்டுவந்து கட்டிபோடுவார்கள். இரவுக்கு வீட்டில் தங்கள் வயல்களில் விளைந்த வைக்கோல், கடலை கொடி, தட்டைகள் என தீவனம் கொடுப்பார்கள்.
மேலும் பணம் தேவை என்று வரும்போது கால்நடைகளை விற்பனை செய்து சமாளித்து வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியாக மழையின்றி வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயம் முற்றிலும் இல்லாமல் போனது. விவசாயம் பொய்த்துபோனதால் கால்நடைகளுக்கு தீவினத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் விவசாயிகள் கால்நடைகளை படிப்படியாக விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு படிப்படியாக குறைந்துவிட்டது. தொடர் வறட்சியால் மேச்சல் நிலங்கள் புல் இல்லாமல் கருகிவிட்டது.
இதனால் கால்நடைகள் செல்வதும் இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு மாதங்கள் விட்டுவிட்டு அவ்வப்போது கன மழை பெய்யதது. இதனால் மேச்சல் நிலங்களில் பல ஆண்டுகளை போல் இல்லாமல் நல்ல முறையில் புல் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் முழங்கால் அளவிற்கு புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. ஆனால் புற்களை தின்பதற்கு கால்நடைகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேச்சல் நிலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags : Livestock grazing land ,
× RELATED நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரம்