×

₹50 கோடி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை

விழுப்புரம், நவ. 20: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் நாகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (31), கள்ளக்குறிச்சி தாலுகா ஈரியூரை சேர்ந்த அழகேசன் (30), செந்தில்குமார் (45), சங்கராபுரம் தாலுகா பூட்டை மெயின்ரோட்டை சேர்ந்த சுரேஷ்கண்ணா (41), சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (40), விஜயபுரத்தை சேர்ந்த வேலாயுதம் (51) ஆகிய 6 பேர் சேர்ந்து தனியார் நிறுவனம் நடத்தி அங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி நம்ப வைத்து ரூ.50 கோடி வரை வசூலித்து மோசடி செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், சுரேஷ்கண்ணா, வேலாயுதம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அழகேசன், செந்தில்குமார், செல்வம் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே பணம்கட்டி ஏமாந்தவர்கள் புகார்அளிக்கலாம் என்று காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி தனியார் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள்  மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்து வருகின்றனர். இதனால் முக்கியகுற்றவாளியான வெங்கடேசன் இதுவரை யார், யாரிடம் பணம்வாங்கி மோசடி செய்துள்ளார். எவ்வளவு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி வேடம்பட்டு சிறையில் உள்ள வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜேஸ்வரி, வெங்கடேசனை 3 நாட்கள் போலீஸ்காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வரும் 20ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்படி காவலில்எடுத்த போலீசார் வெங்கடேசனிடம் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Tags :
× RELATED மரக்காணம் அருகே பட்டாசு...