×

குடிநீர் வழங்காததை கண்டித்து சப்-கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் திடீர் முற்றுகை

விருத்தாசலம், நவ. 20: குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலிகுடங்களுடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலம் நகராட்சி மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு குடிநீர் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டபோது, குடிநீர் இணைப்பு குழாய்களுக்குள் அடைப்பு உள்ளதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. அதனால் அதுவரை கடலூர் மெயின் ரோட்டிலிருந்து செல்லும் குழாய்களிலிருந்து இணைப்பு வழங்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் இணைப்பில் இருந்து குடிநீர் இணைப்பு தருவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உள்ளனர். இதுகுறித்து  தகவல்அறிந்த விருத்தாசலம் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து இது நெடுஞ்சாலைத்துறை இடம் என்பதால் இங்கு பள்ளம் தோண்டக்கூடாது என தடுத்து பணியை நிறுத்திவிட்டனர்.

இதனால் குடிநீர் இன்றி தவித்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மீண்டும் சென்று கேட்டபோது, நெடுஞ்சாலைத்துறையை சென்று கேளுங்கள் எனக்கூறியுள்ளனர். நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டால் நகராட்சியிடம் சென்று கேளுங்கள் என கூறி பொதுமக்களை அலைக்கழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலி குடங்களுடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சப்-கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : arrest ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பஞ்., அலுவலகத்தை பெண்கள் முற்றுகை