×

ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு சப்ளை குறைப்பு

திருவள்ளூர், நவ. 20: திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு, இந்த மாதம் கிடைக்க வேண்டிய துவரம் பருப்பில், 30 சதவீதம் குறைவாக சப்ளை செய்யப்பட்டு உள்ளது. இதனால், ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு கிடைக்காமல், வெளிச்சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், குடும்ப தலைவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. பொது வினியோக திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. வழிகாட்டு நெறிமுறைப்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில், துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், இலவச அரிசி, கோதுமை ஆகியவை வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி உட்பட அரசு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

அங்கிருந்து, ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப பொருட்களை அனுப்புவது வழக்கம். மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்களில், 70 சதவீத அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே, மாதந்தோறும் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. பொருட்கள் குறைந்த அளவில் அனுப்பப்படுவதாலேயே, நுகர்வோருக்கு அனைத்துவித மானிய பொருட்களும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நுகர்வோர் கேட்கும்போது, குறைந்த அளவிலேயே ‘’சப்ளை’’’’ வழங்கப்படுகிறது என கூறி விற்பனையாளர்கள் சமாளித்து அனுப்புகின்றனர். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும், துவரம் பருப்பு அனைவருக்கும் கிடைக்கவில்லை என நுகர்வோர் புலம்பி வருகின்றனர். 70 சதவீதம் மட்டுமே அனுப்புவதால், மாதம் துவங்கியதும் முன்கூட்டியே வருபவர்கள் வாங்கிக்கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அடுத்த மாதம் வழங்குவதாக கூறி அனுப்புகின்றனர்.

இதனால், வீட்டுத் தேவைக்கு அதிக விலை கொடுத்து வெளியே வாங்க வேண்டிய நிலை ஏழை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்ப தலைவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘’எங்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை 30 சதவீதம் குறைவாக அனுப்பப்படுகிறது’’’’ என்றனர். இது அனைத்து தரப்பு நுகர்வோர் மத்தியிலும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துவரம் பருப்பு கிடைக்காததால், தற்போது ஒவ்வொரு நியாய விலை கடையிலும் நுகர்வோர் பிரச்னை செய்ய துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, வட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொது வினியோக திட்டத்தின் மூலம் வழங்க, மாவட்டத்திற்கு வழக்கத்தைவிட குறைந்த அளவே அத்தியாவசிய பொருட்கள் வந்துள்ளது. எனவே, ரேஷன் கடைகளுக்கு அவை பங்கிட்டு அனுப்பப்படுகிறது’’ என்றார்.

Tags : ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு