×

கல்லட்டி மசினகுடி சாலையில் 24 மணிநேர போக்குவரத்து

கூடலூர், நவ.20: மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்கு கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையை உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்கு 24 மணி நேரமும் பயன்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பகல் நேரத்தில் வந்து செல்லவும் அனுமதிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மசினகுடி அனைத்து அரசியல் பொது நல அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் அதிகாரிகள் அழைப்பை ஏற்று பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மசினகுடி லாக் ஹவுஸ் பகுதியில் புலிகள் காப்பக வெளிவட்ட கள இணை இயக்குனர் காந்த், ஊட்டி ஆர்டிஓ சுரேஷ்,   கூடலூர் டிஎஸ்பி ஜெய்சிங், வனச்சரகரகள் காந்தன், மாரியப்பன், முரளி ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.

    அரசியல், பொதுநல, சுற்றுலா வாகன ஓட்டுனர் மற்றும் வழிகாட்டிகள் சங்கம்,  வியாபாரிகள் ஓட்டல் விடுதி உரிமையாளர்கள் சங்கம், சிறியூர் ஆனைகட்டி ஊர்  நல சங்கம், மகளிர் அமைப்புகள் சார்பில் வர்கீஸ், நரசிம்மன்,  உண்ணாகிருஷ்ணன், மொய்தீன், நாசர், ரவி, சிவகுமார் கார்பீல்டு உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இரவு நேரத்தில் மசினகுடி பகுதி மக்கள் பயன்படுத்த கல்லட்டி சாலை மட்டுமே உள்ளது. இப்பகுதி மக்களால் வனத்திற்கோ, வன விலங்குகளுக்கோ அல்லது வனத்துறைக்கோ எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படுவது இல்லை. ஆனால் வனத்துறையின் நடவடிக்கைள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் போராட்டத்திற்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அதிகாரிகள் அளித்துள்ள உறுதி மொழியை மதிக்கின்றோம். சுமுக தீர்வு ஏற்படா விட்டால் போராட்டம் மீண்டும் துவங்கும்,’’ என்றனர்.சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி  பேசுகையில், ‘‘வனச் சட்டங்களை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு பாதிப்புகள்  ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்களின் பிரச்னைகளை தீர்க்க சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில்  சமூக உடன்பாடு ஏற்பட நடவடிக்கை எடுப்பேன்,’’ என்றார்.

Tags : Kallatti Masinagudi Road ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்