×

949 பயனாளிகளுக்கு ₹1.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி, நவ.19: பர்கூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 949 பயனாளிகளுக்கு ₹1.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பர்கூரில், தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பர்கூர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி வரவேற்றார்.  இந்நிகழ்ச்சியில், 650 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 207 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 52 பேருக்கு தனி பட்டா, 35 மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 949 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 90 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, தாசில்தார்கள் சித்ரா, முனுசாமி, தனி தாசில்தார் சின்னசாமி, துணை தாசில்தார் பெரியண்ணன், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்நாதன், பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் முகமதுபையாஸ், முன்னாள் எம்பி பெருமாள், கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாஜலம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திமுக எம்எல்ஏ ஆவேசம்
விழாவில், திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் பேசியதாவது: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதியவர்கள், பெண்களுக்கு உதவித்தொகை வழங்க கோரி, சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்களிடம் இதுவரை 700 மனுக்கள் அளித்திருக்கிறேன். இதுவரை ஒருவருக்கு கூட உதவித்தொகை வழங்கப்படவில்லை. அதே போல் கால்நடைத்துறை மூலம் விலையில்லா கறவை மாடு, ஆடுகளும் வழங்கப்படுவதில்லை. ஒரு கிராமத்திற்கு 600 பேருக்கு ஆடு, மாடுகள் வழங்குவதாக கூறி, ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கி விட்டு, மீதமுள்ளதை சந்தைகளில் விற்று விடுகின்றனர். கிருஷ்ணகிரி தொகுதி மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் வழங்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என் தொகுதியை மட்டும் ஏன் புறக்கணிக்கின்றனர்?. நாங்கள் பாகிஸ்தான், சீனா நாட்டை சேர்ந்தவர்களா? இதன் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு கலெக்டர் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், உரிய காரணங்களை கண்டறிந்து சரி செய்யப்படும் என்றார். இதையடுத்து விழாவில் இருந்து செங்குட்டுவன் எம்எல்ஏ பாதியில் வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்