×

கோயிலில் சாமி சிலைகள் உடைப்பு சிசிடிவி பதிவை வைத்து விசாரணை

சேந்தமங்கலம், நவ.13: சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியில் பூசாரிகள் இடையே உள்ள கோஷ்டி மோதல் காரணமாக சாமி சிலைகள் உடைக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டி பெரியசாமி கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் கருவறையில் இருந்த விளக்கு கூண்டு, வளாகத்தில் இருந்த கருப்பணார், முனியப்பன் சிலைகள் மற்றும் குதிரை வாகனத்தின் கால் பகுதி  ஆகியவற்றை அடித்து உடைத்தனர். மேலும், பூசாரி ரகுவின் வீட்டு கதவை அடித்து உடைத்தனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தப்பியோடிய இருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலறிந்த சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்ஐ கெங்காதரன் விசாரணை நடத்தினர்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் சிலை உடைக்கப்பட்டதால் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணன் சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தீபா சிலைகளை உடைத்த மர்மநபர்களை தேடி வருகிறார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோயிலில் பூஜை செய்யும் பூசாரிகளுக்குள் கோஷ்டி பூசல் காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கோயில் பூசாரிகள், பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் துப்பாக்கியுடன் வந்ததால் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Investigation ,record breaking ,CCTV ,Sami ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...