×

யூரியாவை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை, நவ.13: யூரியா உரத்தினை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான அளவு யூரியா உரம் பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் யூரியா உரத்தினை அரசு நிர்ணயித்த விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்கு தேவையான யூரியா உரம் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டு மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு செல்லும்போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்கி பயனடையலாம்.

உர விற்பனையாளர்கள் யூரியா ஒரு மூட்டையின் விலை அதிகபட்சமாக ரூ.266.50 க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது. யூரியா உரத்துடன் வேறு எந்த இடுபொருட்களையும் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது. இவ்வாறு யூரியா உரத்தினை கூடுதல் விலைக்கோ அல்லது முறையான உர உரிமம் இன்றியோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் அலுவலர்கள் மூலம் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்பொழுது அனைத்து வட்டாரங்களிலும் உள்ள உர விற்பனை நிலையங்களில் உர ஆய்வாளர்களால் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், யூரியா உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட வட்டார உர ஆய்வாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநருக்கு (தரக்கட்டுப்பாடு) தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன்...