×

அரசு சிறப்பு ஏசி பேருந்துகளால் மெல்ல பறிபோகும் இலவச பஸ்பாஸ்

தேனி, நவ. 12:தமிழ்நாடு அரசு, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு அரசு பேருந்துகளில் குடும்பத்துடன் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதேபோல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு பயண கட்டணத்தில் சலுகை அறிவித்து கட்டணம் வசூலிக்கின்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமிரா மேன்களுக்கு பஸ் பாஸ் வழங்கியுள்ளது. அரசு அறிவிப்பின்படி, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இதுவரை இச்சலுகை உள்ள அனைத்து பிரிவினரும் பயணம் செய்து வந்தனர். தற்போது அரசு போக்குவரத்துக்கழகம் ஏசி கோச் எனப்படும் சிறப்பு பேருந்தை மாவட்டந்தோறும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய பஸ்சில் பயணக்கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேனியில் இருந்து மதுரைக்கு இப்புதிய ரக ஏசி பஸ் இயக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்ச கட்டணமே ரூ.34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேனியில் இருந்து ஆண்டிபட்டி செல்ல ரூ.34ம், தேனியில் இருந்து உசிலம்பட்டிக்கு ரூ.46ம், தேனியில் இருந்து செக்காணூரணிக்கு ரூ.65ம், தேனியில் இருந்து மதுரைக்கு ரூ.82ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற வகை பேருந்துகளில் தேனியில் இருந்து ஆண்டிபட்டிக்கு ரூ.15ம், தேனியில் இருந்து மதுரைக்கு ரூ.60ம் கட்டணம் உள்ள நிலையில் அரசு ஏசி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கூடுதல் கட்டணம் வசூல் ஒருபுறம் இருக்கின்ற நிலையில், இப்பேருந்தில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் இதுவரை சலுகை அனுபவித்து வந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினரோ, ஊடகத்துறையினரோ, கோர்ட்டுக்கு கொண்டு செல்ல கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கோ, பணிக்காக செல்லும் சக அரசு போக்குவரத்துக்கழக ஊழியருக்கோ, சலுகை கட்டணத்தில் பயணிக்க முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சிலர் கூறும்போது, சிறப்பு பேருந்துகளில் சென்னை செல்லும் பேருந்துகளில் கூட போக்குவரத்துக்கழக பணியாளர்களின் குடும்பத்தினர் இலவச பஸ்பாசில் செல்ல அனுமதி உள்ளது. ஆனால் தற்போது அரசு ஏசி பஸ்சில் இச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் அதிகப்படியாக இதுபோன்ற சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதுவரை இலவச பஸ்பாஸ், சலுகை விலை கட்டணம் அனுபவித்து வந்தவர்களின் சலுகையை மறைமுகமாக இந்த அரசு பறிக்க முயல்வதாகவே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வகை பேருந்துகளிலும் பிறபேருந்துகளை போல சலுகை வழங்க வேண்டும் என்றனர்.

Tags : government ,AC ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...