×

திருப்புத்தூர் குளத்தில் தாமரை பூக்கள் திருடியவர்களின் வாகனம் பறிமுதல்

திருப்புத்தூர், நவ.12:  திருப்புத்தூர் அச்சுக்கட்டுத்தெருவில் உள்ள அம்மா ஊரணி குளத்தில் தாமரைப்பூக்களை திருடிய வாகனத்தை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் உள்ளது அம்மா ஊரணி குளம். இந்த குளத்தில் மீன்கள் அதிகளவில் இருப்பதால் கடந்த 2019-2020ம் ஆண்டிற்கு மீன் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த ஏலத்தை அச்சுக்கட்டு பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் என்பவர் வெறும் ரூ.4 ஆயிரத்திற்கு எடுத்து ரசீது போட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த குளத்தில் தாமரை விதைகளை தூவி அதில் வளரும் தாமரை மலர்களை சிலர் பறித்து விற்பதாக வழக்கறிஞர் ராபின் என்பவர் திருப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. நேற்று காலையில் மதுரையை சேர்ந்த இரண்டு பேர் அம்மா ஊரணி குளத்தில் தாமரைப்பூக்களை பறித்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டனர். தாமரைப்பூக்களை பறித்தவர்கள் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் போலீசாருக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தாமரைப்பூக்களை திருடுவதாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர் மோகன் ஆகியோர் வாகனத்தை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகம் சென்றனர். பின்னர் அங்கு தாமரைப்பூக்களை திருடிய நபர்களுக்கு பெயருக்கு ரூ.500க்கு மட்டும் ரசீது போட்டு வாங்கிக்கொண்டு அவர்களை விட்டுவிட்டனர். இந்த தாமரைப்பூக்களை சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் குத்தகைக்கு விட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupputhur pond ,
× RELATED நாடு முழுவதும் 69,000 பெட்ரோல்...