×

வத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் உடலால் நோய் பரவும் அபாயம்

வத்தலக்குண்டு, நவ. 12: வத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் உடலை அகற்றாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோட்டில் 5 பள்ளிகள், 3 மருத்துவமனைகள் உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள், நோயாளிகள் நடமாட்டம் என இச்சாலை பரபரப்பாகவே இருக்கும. இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக 20க்கும் மேற்பட்ட குரங்குகள் திரிகின்றன. இக்குரங்குகள் பள்ளிகளுக்கு மாணவர்கள் கையில் கொண்டு செல்லும் உணவை பறித்து செல்வது, மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை விரட்டுவது என பலவகையில் பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறது. குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கோரி வனத்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்தவாரம் அதே தெருவில் உள்ள ஒரு மாடியில் செல்போன் டவரில் உள்ள மின்சாரம் தாங்கியை தொட்ட குரங்கு ஒன்று உயிரிழந்தது. ஆனால் இதுவரை அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குரங்கின் உடல் அழுகி அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஏற்கனவே குரங்குகள் தொல்லையால் அவதிப்பட்டு வந்தோம். தற்போது மின்சாரம் தாக்கி இறந்த குரங்கினால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் வனத்துறையினர் மெத்தனமாக உள்ளனர். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் வனத்துறையினர் விரைந்து வந்து குரங்கின் உடலை அப்புறப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம்