×

வடசேரி பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்

நாகர்கோவில், நவ. 12: வடசேரி பஸ்நிலையத்தில் பெண்களிடம் அத்துமீறும் குடிமகன்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையமாக வடசேரி பேருந்து நிலையம் திகழ்ந்து வருகிறது. இந்த பஸ் நிலைத்தில் இருந்து தொலைதூரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் இந்த பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும். வெளியூர்களில் இருந்து வருபவர்களும், வெளியூர்களுக்கு செல்பவர்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வருவதால் காலை வேளையில் அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கும். இரவு நேரங்களில் குறைந்த அளவில் பயணிகள் கூட்டம் இருக்கும். வடசேரி பஸ் நிலையத்தில் அவ்வப்போது சமூகவிரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்களுக்கு எதிரான செயல்கள் பஸ் நிலையத்தில் அறங்கேறி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், திருவனந்தபுரம் பஸ்கள் நிற்கும் இடத்தில் பஸ்சிற்காக நின்றுக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் ஒரு வாலிபர் சென்று முகவரி கேட்பது போல் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் மலையாளத்தில் ஏதோ கூறியுள்ளார். பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். உடனே அங்கு நின்ற பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடிக்கொடுத்தனர். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.பின்னர் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்கு முன்பு அந்த வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிச்சென்று விட்டார். இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 இது குறித்து பயணிகள் கூறியதாவது: வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் தனிமையில் நிற்கும் பெண்களிடம் குடிமகன்கள் அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் போலீசாரிடம் சிக்கும்போது, அவர் மீது சிறிய வழக்கு போடுகின்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் அபராத தொகை செலுத்திவிட்டு வெளியே வருகின்றனர். பின்னர் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களிடம் சில்மிஷம் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோல் இரவு நேரங்களில் புறக்காவல் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து வர வேண்டும். அப்படி சென்றால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்றனர்.

Tags : bus stand ,Vadasseri ,
× RELATED விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீர்