×

புதர்கள் அதிகரிப்பால் தேயிலை தோட்டத்தில் விலங்குகளால் ஆபத்து

ஊட்டி, நவ. 12: தேயிலை தோட்டங்களில் வலம் வரும் காட்டு மாடுகள்உள்ளிட்ட விலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். விலங்குகளின் தால்லையை குறைக்க தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் வனங்களை ஒட்டியே காணப்படுகிறது. இதனால், காட்டு மாடுகள் அதிகளவு மக்கள் வாழும் பகுதிகளிலேயே முகாமிட்டு ேதயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வருகின்றன. தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகொடிகளை உண்பதற்காக வரும் இந்த காட்டு மாடுகள் எப்போதுமே தேயிலை தோட்டங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.  ஊட்டி அருகேயுள்ள கைகாட்டி, பெங்கால் மட்டம், சாம்ராஜ், மைனலை மட்டம், மெரிலேண்டு, ஆருகுச்சி, கொலக்ெகாம்பை, அதிகரட்டி போன்ற பகுதிகளில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்துள்ளன.

இவைகள் பகல் நேரங்களிலேேய தேயிலை தோட்டங்களுக்கு வரும் நிலையில், அவைகள் உள்ள பகுதிகளுக்கு செல்ல தொழிலாளர்கள் தவிர்த்துவிட்டு வேறு பகுதிகளில் தேயிலை பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில சமயங்களில் இந்த காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களில் உள்ள புதர் செடிகளில் மறைந்துக் கொள்கின்றன. இவைகள் உள்ளதை தெரியாமல் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் போது, திடீரென வந்து தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது அல்லது பலத்த காயம் ஏற்படுகிறது. மேலும், தற்போது தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை தோட்டங்களை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துவிட்டனர்.
இந்த ேதயிலை தோட்டங்களை முறையாக பராமரிப்பதில்லை. இதனால், இது போன்ற தேயிலை தோட்டங்கள் புதர்களாக மாறி விடுகின்றன. இது போன்று புதர்களாக மாறிய தேயிலை தோட்டங்கள் தற்போது சிறுத்தை, காட்டு மாடுகள் மற்றும் மான் போன்ற வன விலங்குகளின் கூடாரமாக மாறிவிட்டன.  இவைகள் பகல் நேரங்களில் இங்கு மறைந்து கொள்வதும் இரவில், உணவிற்காக அருகில் உள்ள மக்கள் வாழும் பகுதிக்கு வரத்துவங்கிவிட்டன. சிறுத்தைகள் தற்போது மக்கள் வாழும் பகுதிகளிலேயே இது போன்ற புதர்களில் பகல் நேரங்களில் மறைந்து கொள்கின்றன.

இரவு நேரங்களில் பொதுமக்கள் வளர்க்கும் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, கோழிகளை வேட்டையாடுகின்றன. இவைகள் குடியிருப்பின் முன் மற்றும் பின்புறம் உள்ள வளர்ப்பு பிராணிகளின் கூடாரங்களுக்கு சென்று பிடித்துச் செல்கின்றன. இதனால், இரவு நேரங்களில் தற்போது பொதுமக்கள் வீட்டை விட்டே வெளிேய வர அச்சப்படுகின்றனர். பெங்கால்மட்டம், சாம்ராஜ், மைனலைமட்டம், கோக்கலாடா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பகல் நேரங்களிலேயே விலங்குகளின் தொல்லையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, சூரியன் வெளிச்சம் மறைந்து இருள் சூழ்ந்தால், தற்போது வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். எனவே, பெங்கால் மட்டம், சாம்ராஜ், கோக்கலாடா, மைனலை மட்டம் போன்ற பகுதிகளில் தேயிலை தோட்டங்களிடையே வளர்ந்துள்ள புதர்களையும், தனியார் தேயிலை தோட்டங்களின் அருகில் உள்ள புதர் செடிகளையும் அகற்றி வன விலங்குகள் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புக்களின் அருகே வருவதை தடுக் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED மழையால் நிரம்பிய கண்மாய் கரைகள் உடையும் அபாயம்