×

பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு இனி எல்லாமே ஆன்லைன்

கோவை, நவ.12: பள்ளி பொதுத்தேர்வுகளுக்கான மாணவர் தகவல்களை எமிஸ் இணையதளம் மூலமாக மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.  இதன்மூலம் இரட்டைப்பதிவு மற்றும் தகவல் பிழைகள் தவிர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்கள் எமிஸ் எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை மின்ணணு தளத்தில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதில் மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி, ரத்தப்பிரிவு, ஆதார் எண், தொடர்பு எண், சாதி சான்றிதழ் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இத்தகவலின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு, பாடப்புத்தகம், இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல கடந்த ஆண்டில் பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் தனியாக மாணவர் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதில் மாணவர்களின் பெயர், இனிசியல் மற்றும் விவரங்களில் பிழைகள் அதிகளவில் இருந்து வந்தது.

இதை சரிசெய்யும் வகையில், தகவல் பிழைகளை தவிர்க்கும் பொருட்டு அரசு தேர்வுகள் துறை இணையத்தில் பொதுத்தேர்விற்காக விண்ணப்பிக்கும்போது மாணவர் குறித்த விவரங்களை எமிஸ் இணையத்தின் வாயிலாக எடுத்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்தது.  இதையடுத்து இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு விண்ணப்பத்திற்கான தகவல்கள் எமிஸ் இணையதளத்திலிருந்து  அரசு தேர்வுகள் துறை இணையத்தில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு கோவை துணிவணிகர் சங்க மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.  இதில் கோவை, பொள்ளாச்சி, பேரூர், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டங்களை சேர்ந்த மெட்ரிக், மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.  தகவல்களை பதிவு செய்தல், பிழை திருத்தம், தேர்வு கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. நான்கு கட்டங்களாக நடந்த பயிற்சியில் மொத்தமாக 540 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த...