×

கும்மிடிப்பூண்டி அருகே சூரப்பூண்டி ஏரியில் கழிவுநீர் கலப்பு

கும்மிடிப்பூண்டி, நவ. 12: கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் பருவகாலத்துக்கு ஏற்றவாறு நெற்பயிர், வேர்க்கடலை, காராமணி, எள்ளு உள்பட பல்வேறு வகை பயிர் செய்து வருகின்றனர். இக்கிராமத்தை ஒட்டி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கிருந்துதான் சுமார் 300 ஏக்கர் விளைநிலங்களுக்கு மதகு வழியாக நீர் பாசனம் செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த ஏரியிலிருந்து கடந்த சில நாட்களாக மதகு வழியாக உபரிநீர் கருப்பு நிறுத்துடன் வெளியேறுகிறது. இந்த நீர், கழிவுநீராக உருமாறி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.  இந்த நீரை பருகும் கால்நடைகளுக்கும், நிலத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கும்   ஒரு வித அரிப்பு தன்மை ஏற்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த விவசாயிகள், ஏரிக்குள் சென்று பார்த்தனர். தண்ணீர் தெளிந்த நீராக இருந்தது.  மதகு மற்றும் வரத்து கால்வாய்களில் அப்பகுதி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் தேங்கி ஏரி நீரில் கலந்து மாசடைந்திருக்கலாம்  என விவசாயிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், ஏரி நீரை சுத்திகரிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சூரப்பூண்டி ஏரி, மதகு மற்றும் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மாசடைந்த ஏரி நீரினால் மக்களுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : lake ,Surappundi ,Kummidipoondi ,
× RELATED 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ளது