×

60ல் இருந்து 40 அடி அகலமாக சுருங்கிய அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை

ஆவடி, நவ.12: ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில்வே ஸ்டேசன் செல்லும் சாலை 60அடி அகலத்தில் இருந்து  40 அடி அகலமாக சுருங்கியதாலும், புழுதி பறப்பதாலும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர்  ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் இருந்து அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சாலை செல்கிறது.  60 அடி அகலம் கொண்ட இச்சாலையை ஜோதி நகர், ஸ்ரீதேவி நகர், சிவசக்தி நகர், நாகம்மை நகர், இ.எஸ்.ஐ அண்ணாநகர், அந்தோணி நகர், ஜேபி நகர், ரவீந்திரன் நகர், வைஷ்ணவி நகர், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், சோழன் நகர், சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், திருமலைவாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். பல தரப்பினரும் தங்களது அன்றாட பணிகள் தொடர்பாக அண்ணனூர் ரயில் நிலையம் வழியாக செல்கின்றனர்.

இச்சாலை, ஆரம்பத்தில் ரயில்வே நிர்வாகம் பராமரிப்பில் இருந்து வந்தது.  2011ம் ஆண்டுக்கு பிறகு, இச்சாலை, அப்போதைய ஆவடி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நகராட்சி சார்பில் இருபுறமும் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு ரூ.2 கோடியில் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு, இச்சாலையை 6ஆண்டுக்கு மேலாக பராமரிக்காமல் நகராட்சி நிர்வாகம் கைவிட்டது. தற்போது, இச்சாலை கடந்த 3 ஆண்டுக்கு மேலாக  பெய்த பருவமழையால் சேதமடைந்து கிடக்கிறது. மேலும் இந்த சாலையில் புழுதி பறப்பதால்  சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் தினமும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அண்ணனூர் ரயில்வே ஸ்டேசன் சாலை பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக கிடைக்கிறது. இதனால் பாதசாரிகள், பெண்கள், முதியோர், பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் அவதிப்பட்டு சாலையை கடக்கின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான சாலையில் விழுந்து காயமடைகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் சிறு மழை பெய்தால் கூட சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கும். இதன் காரணமாக, சாலை சேறும் சகதியுமாக மாறி பாதசாரிகள் அறவே நடமாட முடியாது.  மேலும், சமீபகாலமாக இச்சாலை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 60 அடி அகலத்தில் இருந்த இச்சாலை தற்போது பல இடங்களில் 40 அடியாக சுருங்கிவிட்டது. சாலையை ஆக்கிரமித்து துரித உணவகங்கள், காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகள், தள்ளுவண்டியில் டிபன் கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், சில இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கூட கட்டி வருகின்றனர். இவ்வாறு பல ஆக்கிரமிப்புகளால் சாலை 40 அடியாக மாறி விட்டது. இப்படியே விட்டால், வருங்காலத்தில் இச்சாலை இன்னும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அதிக அளவு சிக்கி தவிக்கும்.

இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலத்தில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல முடியாத அவலம் உருவாகும். இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, ஆவடி மாநகாராட்சி அதிகாரிகள் அண்ணனூர் 60 அடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,  புதிதாக தார் சாலை அமைக்கவும் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Annanur Railway Station Road ,
× RELATED 40 குவார்ட்டர் பறிமுதல்