×

அவமானங்களை படிக்கட்டுகளாக நினைத்து முன்னேற வேண்டும் அரசு பணியால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியும்


வேலூர், நவ.8: அரசு பணியால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியும் என்று காட்பாடியில் நடந்த மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் காட்பாடி சன்பீம் பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார். சன்பீம் பள்ளிகளின் கவுரவ தலைவர் அரிகோபாலன் வரவேற்றார். விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: யூதர்களை விட இந்தியர்கள்தான் புத்திசாலிகள். இதுவரை 200 யூதர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அவர்கள் சிறுசிறு கருவிகளை கண்டுபிடித்தாலும் அவற்றை ஆவணப்படுத்தி வந்தனர். தமிழர்கள் அவர்களை விட புத்திசாலிகள்தான். ஆனால் கண்டுபிடிப்புகளை உரியமுறையில் ஆவணப்படுத்தாமல் விட்டது ஒன்றே குறையாக உள்ளது. இதுவரை சிந்து சமவெளி நாகரீகம்தான் பழமையான நாகரீகம் எனக்கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கீழடி அகழ்வாராய்ச்சிகள் மூலம் உலகமே தமிழர்களின் நாகரீகத்தை திரும்பி பார்த்து வருகிறது. இன்னும் முழுமையான ஆராய்ச்சி முடிந்தவுடன் மிகப்பெரிய அளவில் தமிழர்களின் நாகரீகம் உலகிற்கு தெரியவரும். இதனை வைகை நதி நாகரீகம் எனவும் அழைக்க வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் இன்றும் தூய்மையான தமிழ் பேசப்பட்டு வருகிறது. கடந்த 1884ம் ஆண்டிலேயே தமிழில் மருத்துவம் படிக்க தொடங்கினர். ஆனால் நமது தமிழகத்தில் சித்தர்கள் வாய்மொழியாக மட்டுமே மருத்துவம் குறித்து எடுத்துரைத்து வந்தனர். அதனை நூல் வழியாக எழுதி வைக்காதது நமக்கு ஒரு குறையாக உள்ளது. இன்றைய மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் ஆங்கிலம் ேபசும் திறமையை வளர்த்து கொண்டால் அது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதே போன்று தமிழுக்கும் முக்கிய துவம் கொடுக்க வேண்டும். தமிழ் நம் முன்னோர்களை போற்றும் மொழி. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பொறியியல், மருத்துவம் படிக்க வைப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆனால் இன்னும் மற்ற துறைகள் குறித்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், ஐஎன்ஏ தொடங்காமல் இருந்திருந்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பின்பு தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இருக்கும். அரசு பணிக்கும், தனியார் பணிக்கும் வேறுபாடு உள்ளது. தனியார் பணி என்பது சம்பளம் பெற்றுக்கொண்டு நாமும், நமது குடும்பமும் மட்டும் நன்றாக இருக்க முடியும். ஆனால் அரசு பணி என்பது சமுதாயத்திற்கு செய்யப்படும் சேவையாக உள்ளது. எனவே அரசு பணியும் சாதாரண பணியல்ல.   இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து மழைநீர் சேகரிப்பு குறித்த கையேடுகளை மாணவர்களுக்கு கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, தன்னம்பிக்கை கருத்தாளர் நெடுஞ்செழியன் மாணவ, மாணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை
வழங்கினார்.

Tags : government ,
× RELATED இருப்பிட சான்று பெற்றவர்களுக்கே...