வாக்காளர் பட்டியலில் ஒருவர் கூட விடுபட கூடாது

சிவகங்கை, நவ. 8: வாக்காளர் பட்டியலில் ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சம்பத் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சம்பத் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் 100சதவீதம் ஆய்வு செய்து அதனடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மைய நிலைய அலுவலர்கள் ஒவ்வொரு வார்டாக சென்று ஒருவர் கூட விடுபடாத வகையில் ஆய்வு செய்ய வேண்டும்.

இறந்தவர் பெயர் நீக்கப்பட்டதா என உறுதி செய்ய வேண்டும். வெளியூரிலிருந்து மாறுதலாகி வரும் நபர்கள் குறித்த விபரம் சரிசெய்தல் மற்றும் நீக்கல் போன்ற பணிகளை களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்த பின்பு பதிவேற்றம் செய்ய வேண்டும். தாசில்தார்கள், ஆர்டிஓக்களும் பகுதி வாரியாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து அவர் ஒக்கூர், காரைக்குடி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபன் ஆர்டிஓக்கள் செல்வகுமாரி, சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு