விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும்

குஜிலியம்பாறை, நவ. 8: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குஜிலியம்பாறை ஒன்றியக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் தங்கவேல் கூறுகையில், ‘பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் சிறு, குறு மற்றும் பிற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வீதம் வழங்கப்படுகிறது. அதன்படி, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் முன்னதாக இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பித்த மனுவை, வருவாய்த்துறையினர் பெற்று ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்தனர். தற்போது இத்திட்டத்தில் இதுவரை இணையாத விவசாயிகள் தங்களது சிட்டா நகல், ரேசன்கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், செல்போன் எண் ஆகியவற்றுடன் பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இதற்கு கடைசி நாளான இன்று (நவ.8) வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என குஜிலியம்பாறை வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் உமா கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இத்திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் தங்களின் விண்ணப்ப மனுவை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய, குஜிலியம்பாறை வட்டார வேளாண்மைத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தனியார் இசேவை மையம் மூலம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தனியார் இசேவை மையத்தில் சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. எனவே ஏற்கனவே வருவாய்த்துறை மூலம் இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்தது போல், பதிவு செய்ய வேண்டும். மேலும் இத்திட்டத்தில் இன்னும் விவசாயிகள் நிறைபேர் பயன்பெற இருப்பதால், விண்ணப்பிக்கும் தேதியை கால நீட்டிப்பு செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED தழைச்சத்து உரங்கள் அதிகம் இடுவதை தவிர்க்க வேண்டும்