×

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

ராசிபுரம்.  அக்.23: சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் அடுத்த மதியம்பட்டியில்  திருமணிமுத்தாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக  தரைப்பாலம் உடைந்தது. ரசாயன  நுரை பொங்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். சேலம் மாவட்டம் முழுவதுமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஏற்காடு  சேர்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகர், கொண்டலாம்பட்டி பகுதியில் பெய்யும் மழையால் திருமணிமுத்தாற்றில் வழக்கத்தை காட்டிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம் அருகே மதியம்பட்டியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. மழைகாலத்தில் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இப்பகுதியில் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு சாயப்பட்டறை ரசாயன கழிவுகளால் வெள்ளை நிரத்தில் நுரை பொங்குவது வழக்கமாக உள்ளது.

சுமார் 10 அடி உயரம் வரை தரைப்பாலத்தின் மேல் நுரை பொங்குவதால், அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நியைில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதியம்பட்டி தற்காலிக தரைப்பாலத்தை மூடியபடி தண்ணீர் சென்றது.திருமணிமுத்தாற்றில் ஆகாயத்தாமரை, சாக்கடை மற்றும் சாயக்கழிவுகளும் கலந்து கருப்பு  நிறமாக தண்ணீர் வெளியேறியது. இதனால் மதியம்பட்டி, கல்கட்டானூர், அக்கரைபட்டி உள்ளிட்ட  பல கிராமங்களில், நிலத்தடி  நீராதாரம் மட்டுமின்றி விவசாயமும் பாதிக்கப்படும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. திருமணிமுத்தாற்றில் அடிக்கடி ரசாயன நுரையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தரைப்பாலமும் உடைந்துள்ளதால் மதியம்பட்டி வழியாக பள்ளி,  கல்லூரிக்கு செல்லும் பேருந்துகள் மட்டுமன்றி பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மாற்று ஏற்பாடு செய்துதர  வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumani Mutt ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் அத்திபலகானுரில்...