×

பெண் கூலித்தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவை, அக்.23: மூளைச்சாவு  அடைந்த 38 வயது பெண் கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக  பெறப்பட்டது. இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள். இது  குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி  கூறுகையில்,நாமக்கல் மாவட்டம், பாதரை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது  மனைவி தங்கமணி (38). கடந்த 15ம் தேதி வேலையை முடித்து விட்டு வீடு  திரும்பும்போது பைக் மோதி படுகாயமடைந்துள்ளார். ஈரோடு அரசு  மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின்னர் அவரை கோவை, கே.எம்.சி.ஹெச்.  மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும்  கடந்த 21ம் தேதி தங்கமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரின்  கணவர் பழனிச்சாமி மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.

அதன்படி  தங்கமணியின் இருதய வால்வு, கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும்  எலும்புகள் தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சீறுநீரகம்   கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கண்கள், தோல், எலும்பு, மற்றும் ஒரு  சிறுநீரகம் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், இருதய  வால்வு, சென்னை தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. மக்களிடையே  உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த  பிறகு உடலை தானம் செய்தால் பலரது உயிரை காப்பாற்ற உதவும். உடல் உறுப்பை  தானமாக வழங்கிய தங்கமணி குடும்பத்தினருக்கு நன்றி, என தெரிவித்தார்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை