×

வித்தியாசமான வாசகங்களால் ஓட்டலுக்கு கடன் கேட்டு வருவோரை திணறடிக்கும் கடை உரிமையாளர்

திருமயம்,அக்.18: திருமயம் அருகே ஹோட்டல் நடத்தி வரும் வாலிபர் கடன் கேட்டு வருபவர்களை வித்தியாசமான வசனங்களால் திணறடித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் கணேசன்(26). இவர் கடந்த 5 மாதங்களாக ராயவரத்தில்ஹோட்டல் நடத்தி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் கடன் கேட்டு வருபவர்களை சமாளிக்க முடியாமல் சில வாசகங்களை எழுதி ஹோட்டல் நுழைவாயில் முதல் அனைத்து சுவர்களிலும் ஒட்டியுள்ளார். இதனை படித்து பார்த்து சிலர் நகைச்சுவையாக சிரித்துவிட்டு செல்வதாகவும் சிலர் கடன் கேட்பதை தவிர்ப்பதாகவும் கணேசன் தெரிவித்தார். இது பற்றி கணேசனிடம் கேட்டபோது, எனது ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி. நான் துபாயில் 4 வருடம் பணியாற்றிவிட்டு வீட்டுக்கு வந்தபோது ஏஜெண்ட் ஒருவர் சிங்கபூரில் ரெஸ்டாரண்ட் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ஏமாற்றமடைந்தேன். சிங்கபூரில் வேலை கடினமாக இருந்ததால் திரும்ப சொந்த ஊருக்கு வந்துவிட்டேன்.

இந்நிலையில் சொந்த ஊரில் நல்ல வேலை எதுவும் கிடைக்காத நிலையில் எனக்கு கொஞ்சம் சமைக்க தெரியும் என்பதால் ராயவரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலை தொடங்கினேன். எனது ஊர் வெளி ஊர் என்பதால் ஒரு சிலர் கடன் சொல்லி சாப்பிட்டுவிட்டு திரும்ப தருவதில்லை. மேலும், சிலர் சாப்பாட்டை வாங்கி கொண்டு எதுவும் செல்லாமல் சென்றுவிடுவர். இதுபற்றி கேட்டால் ஓடியா போக போறோம் தருகிறேன் என சொல்லிவிட்டு செல்பவர்கள் திரும்ப வருவதே இல்லை. இது மனதுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது. இதனால் கடன் கேட்பவர்களை சமாளிப்பதற்காக சில வாசகங்களை எழுதி ஹோட்டல் முழுவதும் ஒட்டியுள்ளேன். இருந்த போதும் கடன் கேட்பது குறைந்த பாடில்லை, அப்படி கடன் கேட்பவர்களிடம் சுவரில் ஒட்டியுள்ள வாசகத்தை காட்டிசமாளித்து வருகிறேன் என்றார்.

Tags : owner ,shop ,hotel ,
× RELATED மகளுக்காக சேமித்த ரூ5 லட்சத்தில்...