×

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள பள்ளி மைதானத்தில் மழைநீர் தேக்கம்

ஆவடி, அக். 18: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்திற்குள் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேட்டால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், 19 ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் சரி வர இல்லை. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கும்.
அப்போது மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவார்கள். இதனை அடுத்து, பெற்றோர், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் எளிதாக சென்று வர நடைபாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதன் பிறகு மாநகராட்சி நிர்வாகம் நடைப்பாதை அமைக்க டெண்டர் விட்டது. மேலும், கடந்த 2 ஆண்டுக்கு முன்னர்  பணி தொடங்கப்பட்டு பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆவடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்து மாவட்ட அளவில் 34 மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கால்பந்து, கையேறி பந்து, வட்டு எறிதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி எடுக்க முடியவில்லை. பள்ளியை சுற்றி ஒரு புறத்தில் வீடுகளின் வெளிசுவர் சுற்று சுவராக உள்ளது. இதனை அடுத்து வீடுகளின் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளி வளாகத்திற்குள் வருகிறது. மேலும், வீடுகளில் இருந்து குப்பைகளும் வளாகத்திற்குள் வீசப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு உருவாகி மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்து உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்’’ என்றனர்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சி பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நுழையாமல் தடுக்க சுற்று சுவரை உயர்த்திட வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் தொடர்ந்து பல ஆண்டாக கழிவுநீரை விடும் வீட்டு உரிமையாளர் மீது அதிகாரிகள் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது இந்த பள்ளியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் நிதி பெற்று, பல அடிப்படை வசதிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஆவடி மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பள்ளிக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : school grounds ,Avadi Housing Board Apartments ,
× RELATED அரசு பள்ளி மைதானத்தில் விளையாட அனுமதி வேண்டும்