×

மனிதக் கழிவு சுத்திகரிப்பு மையம் அமைக்க சேத்தூரில் மக்கள் எதிர்ப்பு

ராஜபாளையம், அக். 16: ராஜபாளையம் அருகே, சேத்தூரில் மனிதக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ராஜபாளையம் அருகே, சேத்தூர் பேரூராட்சி 2வது வார்டு பகுதி குடியிருப்பு பகுதியில், மாவட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.4.5 கோடியில் மனிதக் கழிவுகளை  அகற்றி, அதை சுத்திகரித்து நீர்மேலாண்மை செய்யும் திட்டத்திற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சேத்தூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘சேத்தூர் 2வது வார்டு பகுதியில் ஏற்கனவே, சுகாதார வளாகம் கட்டப்பட்டு, அதை பராமரிக்காமல் உள்ளனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. மாவட்டத்தில் எந்த ஒரு பேரூராட்சியும் ஏற்காத நிலையில்,மனிதக் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க சேத்தூர் பேரூராட்சியை தேர்வு செய்தது வருந்தத்தக்கது. இடம் தேர்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். தற்போது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். திட்டத்தை தொடர்ந்தால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை