×

தொடர் லஞ்ச புகார் ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: கலெக்டர் நடவடிக்கை

ஆவடி, அக். 16: தொடர் லஞ்ச புகார் எதிரொலியாக ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆவடி புதிய ராணுவ சாலை, பழைய நகராட்சி அலுவலகத்தில் ஆவடி நகர நில அளவை பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, தனி வட்டாட்சியராக தரன் என்பவர் பணியாற்றி வந்தார். ஆவடி, பட்டாபிராம், கோவில்பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், மிட்டினமல்லி மற்றும் முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம் போன்ற பணிகளுக்கு இங்கு வருகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் வழங்கும் விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன்பேரில் பட்டா, பட்டா பெயர் மாற்றம் தொடர்பான சான்று வழங்கி வருகின்றனர். சமீபகாலமாக இங்கு பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களின் மனுக்களை அதிகாரிகள் நேரடியாக பெறாமல், 10க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் மூலம் ₹25 முதல் ₹35 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுகொண்டு பட்டா வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இவ்வாறு, லஞ்சம் வழங்காவிட்டால் பட்டா வழங்க பல மாதங்கள் இழுத்தடித்து, ஏதேனும் காரணம் கூறி, அவர்களுக்கு பட்டா வழங்க மறுத்து வந்துள்ளனர். இதுதவிர ஆவடி பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு, குளம், குட்டை, நீர்நிலை புறம்போக்கு, கோயில், அனாதீனம் ஆகிய நிலங்களுக்கு போலி பட்டா வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் பொதுமக்கள் சார்பில் ஏராளான புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில், கடந்த 11ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுரு தலைமையில் போலீசார், ஆவடி நில அளவை பிரிவு அலுவலத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த சில புரோக்கர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அலுவலகத்தில் இருந்த தனி வட்டாட்சியர் ஸ்ரீதரன் மற்றும் 3 பெண் ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது, அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ₹90 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பட்டா வழங்கிவிட்டு, அதை பதிவேடுகளில் பதிவு செய்யாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வேலை செய்யும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை யார் வழங்குகிறார்கள், எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், இதுகுறித்து அரசுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை அனுப்பினர். இந்த நிலையில், தனி வட்டாட்சியர் தரனை பணியிட மாற்றம் செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சென்னை எழும்பூர் டிட்கோ-பெட்டோ கெமிக் பூங்கா திட்ட தனி வட்டாட்சியராக தரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு, தனி வட்டாட்சியராக பணியாற்றிய கிருபா உஷா, ஆவடி நகர நில அளவை பிரிவு தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Series ,
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...