×

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம்

மதுரை, அக். 15:  மதுரை மாவட்டத்தில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என மாவட்டத்தில் புதிய கலெக்டராக பதவி ஏற்ற வினய் கூறினார். மதுரை மாவட்ட கலெக்டராக, அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினய் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் நேற்று பதவியேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் முக்கிய திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு செல்லப்படும். வருவாய்த்துறையில் பல்வேறு திட்டங்களின்படி பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

  ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் குடிமராமத்து பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது அதிகாரிகளால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசு புறம்போக்கு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீடு ஒதுக்கீடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.   மாவட்டத்தில் நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் சிறப்பு கவனம் செலுத்துவேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்’’ என்றார்.   புதிய கலெக்டருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், மேலாளர் ராஜேந்திரன், தாசில்தார் சிவபாலன் மற்றும் வருவாய்துறை, பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்பு மக்கள் குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களை பெற்றார். புதிய கலெக்டரின் மனைவி தஞ்சாவூர் மாவட்ட வருமானவரித்துறை ஆணையராக உள்ளார். ஒரு குழந்தை உள்ளது.

அறையில் மேஜை நாற்காலி திசையை மாற்றிய கலெக்டர்
மதுரை கலெக்டர் அறையில் கலெக்டர்கள் வடக்கு திசையை பார்த்து அமர்ந்து, பணிகளை மேற்கொண்டனர். ஆனால், இதற்கு முன் கலெக்டராக இருந்த ராஜசேகர், அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து பணிகளை கவனித்தார். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் வினய், அறைக்குள் வந்ததும், மேஜை நாற்காலி கிழக்கு நோக்கி இருந்ததை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தார். பதவி ஏற்புக்கான கோப்பில் கையெழுத்து போட்ட உடன், ஏன் மேஜை நாற்காலிகளை இடமாற்றம் செய்தீர்கள். பழைய மாதிரி, வடக்கு நோக்கி அமரும் வகையில் மேஜை நாற்காலியை போடுங்கள் என உத்தரவிட்டார். உடனே அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறி கலெக்டர் உட்காரும் இடத்தை பழைய மாதிரி மாற்றினர். பதவி ஏற்புக்காக அரியலூரில் இருந்து மதுரை வந்த கலெக்டர் முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து, பகல் 12.05 மணிக்கு வந்து பதவி ஏற்றுக் கொண்டார்.

Tags :
× RELATED கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்ட பின்...