×

பள்ளி மைதானத்தில் தாழ்வாக செல்லும் மின் வயரால் பீதி

சிவகங்கை, அக்.10: சிவகங்கை அரசு உதவிபெறும் பள்ளி மைதானத்தில் செல்லும் உயர் மின் அழுத்த வயர்களை வேறு வழியில் மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் கே.ஆர்.அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மைதானத்தில் உயர் மின் அழுத்த மின் வயர்கள் மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்லப்படுகின்றன. இந்த மின் வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதால் மழை நேரத்தில் வயர்களுக்கு கீழே சென்றால் மின் காந்த அலைகள் மூலம் மனிதர்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன் மழை நேரத்தில் இவ்வயர்களுக்கு கீழே சென்ற இப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மின் வயரை கூடுதல் உயரத்தில் செல்லும் வகையிலோ அல்லது வேறு வழியில் மின் கோபுரத்தை மாற்றியமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கூறுகையில், மழை நேரங்களில் மாணவர்கள் இப்பகுதியில் செல்லவே அச்சமடைகின்றனர். இதை கண்காணித்துக்கொண்டே இருக்க முடியவில்லை. விளையாட்டு மைதானத்தில் இதுபோல் ஆபத்தான மின் வயர்களை தாழ்வாக செல்லும் வகையில் வைத்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Panic ,school grounds ,
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...