ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர் கிராம மக்கள் அவதி

கடையம், அக். 10:ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் ரயில்வே சுரங்க பாதையில் பெருக்கெடுத்த மழைநீர் நாட்கணக்கில் தேங்கிநிற்பதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ளது செங்கானூர். நெல்லை- செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் உள்ள இக்கிராமத்தில் இருந்த எல்சி 66 கேட்டுக்கு பதிலாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இங்கு தேங்கும் மழைநீரை வெளியேற்றும்பொருட்டு  நிரந்தரமாக  இதனருகே மோட்டார் செட் அமைத்து அதன்மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் பெய்த மழையால் இந்த சுரங்கப் பாதையில் பெருக்கெடுத்த தண்ணீர், நாட்கணக்கில் தேங்கிநிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச்  சேர்ந்த விவசாயி கோபி கூறுகையில்.‘‘சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் விளைநிலங்களுக்கு உரம் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் கொண்டுசெல்ல முடியவில்லை. இதுகுறித்து ரயில்வே பொறுப்பாளரிடம் பல முறை கூறியும் பலனில்லை. அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ்கூட செல்லமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அனைவரும் அவதிப்படுகிறோம்’’ என்றார்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேங்கிநிற்கும் மழைநீரை அகற்றவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, மழைகாலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீரை வெளியேற்ற தனிநபர் நியமிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு ஆகும்.

Tags : Residents ,rainwater village ,Chengannur ,Alavarkurichi ,railway tunnel ,
× RELATED கோயிலுக்கு சொந்தமான இடங்களில்...